மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி - உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் உறுதி

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி - உரிய நடவடிக்கை எடுக்க  அலுவலர்கள் உறுதி
சமாதானப் பேச்சுவார்த்தை
உதவித்தொகை கோரிய மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒரத்தநாடு அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க போராட்ட அறிவிப்பு எதிரொலியாக, வியாழக்கிழமை, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

"உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இதுவரை நிவாரணம் வழங்காததைக் கண்டித்தும், ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் உள்ள பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் போக்கை கண்டித்தும், ஒரத்தநாடு வட்ட அலுவலக வளாகத்தில் அமர்ந்து கொண்டு, மனு எழுதித் தருவதாக சிலர் மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிக்கும் போக்கை கண்டித்தும், இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை எடுத்துக் கூறியும், கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வியாழக்கிழமை காலை ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் சுந்தரச்செல்வி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தஞ்சாவூர் மேலாளர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் அரசு தரப்பிலும், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன், மாவட்டத் தலைவர் கஸ்தூரி, ஒன்றியத் தலைவர் தங்கப்பன், ஒன்றியச் செயலாளர் பாசமலர், பொருளாளர் கவிதா, ஒன்றிய துணைத் தலைவர் மதியழகன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், "இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் கனிவுடன் நடத்தப்படுவார்கள். இ-சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுதுபவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கூடுதலாக பணம் பெறக்கூடாது. அதையும் மீறி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும். ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று நடக்கவிருந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story