மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டம் : திடீர் மின் தடையால் இருட்டில் தவித்த அதிகாரிகள்
திடீர் மின் தடையால் இருட்டில் தவித்த அதிகாரிகள்
ஓசூர் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, ஒன்னல்வாடி ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், இ சேவை மையம், கால்நடை மருந்தகங்கள் மற்றும் குழந்தைகள் மையம் ஆகியவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஓசூர் சானசந்திரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு தலைமையில் ஓசூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர், கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மாவட்ட வருவாய் ஆய்வாளர் சாதனை குரள் உள்ளிட்ட அதிகாரிகளும் வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் துறை வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது திடீரென கூட்ட அரங்கில் மின்தடை ஏற்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் இன்வெர்ட்டர் பழுது என்பதால் சுமார் முக்கால் மணி நேரம் மின்தடை நீடித்தது. இதன் காரணமாக இருட்டிலே அதிகாரிகள் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகளை வழங்கியது அங்கிருந்த அதிகாரிகளுக்கு தெளிவாக கேட்கவில்லை, மின்தடையால் கூட்ட அரங்கில் மின்விசிறிகளும் இயங்காததால் அதிகாரிகள் பெரும் அவதி அடைந்தனர்.
முக்கால் மணி நேரம் கழித்து மின்தடை நீங்கி மின்சாரம் வந்தது. மின் தடை காரணமாக இந்த கூட்டம் நீண்ட நேரம் நடைப்பெற்றதால் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க வந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலக வாயில் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.