முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் நடந்துவரும் ரயில்வே மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அஸ்தம்பட்டி-செரி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக நில எடுப்பு உள்பட மொத்தம் ரூ.129 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேம்பால பணிகள் தாமதமாக நடந்து வந்தது. அதனை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ரெயில்வே மேம்பால பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
அதனால் மேம்பாலத்தின் இருபுறத்திலும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில், முள்ளுவாடி கேட் ரெயில் மேம்பாலத்தின் கட்டுமான பணியை சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) கணேசன், கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு அலகு) குமுதா மற்றும் உதவி கோட்ட பொறியாளர் தேசய்யா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் பிரட்ஸ் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள ரெயில்வே மேம்பாலம் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.