அணைமேடு ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
சேலம் அணைமேடு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.92.40 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. முதலில் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்களும், அதன்பிறகு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கான்கிரீட் தளங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வருவதாகவும், இதனால் அணைமேடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று அணைமேடு ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தனர். தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று சேலம் அணைமேடு ரெயில்வே மேம்பால பணியை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பாலத்தின் அளவு, பாலம் தரமானதாக கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து தரபரிசோதனை மேற்கொண்டனர். மேலும், மேம்பால பணியை விரைந்து முடித்து விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.