குமாரபாளையத்தில் மரம் வெட்டியதை தடுத்த அதிகாரிகள்
குமாரபாளையத்தில் மரம் வெட்டியதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஒரு வீட்டின் முன்பு இருந்த பெரிய மரம் வெட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த மாவட்ட தே.மு.தி.க. மகாலிங்கம், இது குறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இது கண்டதும், நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து, இது போல் மரங்கள் வெட்டக்கூடாது என சொல்லி, மரம் வெட்டும் பணியை பாதியில் நிறுத்தினார்கள்.
இது குறித்து மகாலிங்கம் கூறியதாவது: வீட்டுக்கு ஒரு மரம் வையுங்கள் என்று கூறிவிட்டு, சாலை அமைக்கிறோம், வடிகால் அமைக்கிறோம் என்று கூறி இருக்கும் மரங்களை ஊர் முழுதும் ஒப்பந்ததாரர்கள் வெட்டிக்கொண்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளேன். மரங்களை வெட்டாமல், பணிகள் செய்தால், நமக்கு, நம் சந்ததிக்கு தான் நல்லது என்று யாரும் உணர்வது இல்லை. மரங்கள் வெட்டுவோர் மீது அரசு சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.