ஆவடியில் ஆபத்தான நிழற்குடை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில் கன்னடபாளையம் உள்ளது. கடந்த 2012 அ.தி.மு.க., ஆட்சியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இங்கு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை கால்நடைகள் ஆக்கிரமித்ததால், நவீன மாட்டுத் தொழுவம் போல மாறியது. இதனால், மழைக்காலங்களில் பொதுமக்கள் நிழற்குடையில் ஒதுங்கி நிற்க முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, கடந்த நவம்பரில், நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
ஆனாலும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், கடந்த ஆண்டு ஏற்பட்ட 'மிக்ஜாம்' புயலில், நிழற்குடை துருப்பிடித்து வலுவிழந்தது. இந்நிலையில், அந்த நிழற்குடை மேலும் வலுவிழந்து, ஆபத்தான வகையில் சாய்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்தாமல், சாலையோரத்தில் வெயிலில் காத்திருக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், சிதிலமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்தி, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.