தீ விபத்தில் மூதாட்டி வீடு சேதம் - ஆட்சியர் உதவ கோரிக்கை

தீ விபத்தில் மூதாட்டி வீடு சேதம் - ஆட்சியர் உதவ கோரிக்கை
மூதாட்டி புஷ்பவள்ளி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி புஷ்பவள்ளி ( 75), இவரது கணவர் சிதம்பரம், மற்றும் மகன், மருமகள் ஆகியோர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். புஷ்பவள்ளி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் வழிப் பேத்தி யாழினி (16) என்பவரைப் பராமரித்துக் கொண்டு, யாருடைய ஆதரவும் இன்றி, முடச்சிக்காடு கிராமத்தில் லியாகத் அலி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

மூதாட்டி அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலையைச் செய்து கொண்டும், தனக்கு கிடைக்கும் முதியோர் உதவித்தொகை மூலமும் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், புதன்கிழமையன்று பேத்தி யாழினி தேர்வு நடந்து கொண்டிருப்பதால், பள்ளிக்கு சென்று விட்டார். மூதாட்டி புஷ்பவள்ளி வேலைக்கு சென்று விட்டார். அப்போது மதியம் சுமார் 2 மணியளவில் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைப்பதற்குள் முழுவதுமாக குடிசை வீடு எரிந்து சாம்பலானது.

இதில், வீட்டிலிருந்த பாத்திரங்கள், ஆடைகள், பள்ளி பாடப்புத்தகங்கள், வங்கி, அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகங்கள், ஆதார் அட்டைகள், குடும்ப அட்டை, ஒரு பவுன் தங்க நகை, வெள்ளிக்கொலுசு என சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது. வீட்டில் மின் இணைப்பு இல்லாத நிலையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. எம்எல்ஏ உதவி இது குறித்து தகவல் அறிந்த, பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, தேவையான உதவிகளை செய்வதாக, வாக்களித்து ரூபாய் 10,000 ஐ தனது சொந்தப் பணத்திலிருந்து மூதாட்டியிடம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், வட்டாட்சியர் தெய்வானை உத்தரவின்பேரில், சரக வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், வீரியங்கோட்டை-1 கிராம நிர்வாக அலுவலர் சிவமணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் தற்காலிகமாக பொது இடத்தில் மூதாட்டியும், பேத்தியும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முடச்சிக்காடு தென்னந்தோப்பு உரிமையாளரான மிராசுதார் லியாகத் அலி, தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில், மூன்று சென்ட் நிலத்தை மூதாட்டிக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அந்த இடத்தில் அரசு வீடு கட்டி தந்தால் மட்டுமே அவ்வாறு வழங்குவதாகவும் கூறியுள்ளார். எனவே, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கருணை அடிப்படையில் ஆதரவற்ற நிலையில், 16 வயதுடைய பேத்தியுடன் வாழ்ந்து வரும் மூதாட்டிக்கு பாதுகாப்பாக குடியிருக்க வீடு கட்டித் தர வேண்டும். தேர்வு நேரமாக இருப்பதால் மாணவிக்கு பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் தகவல் அறிந்து ஓடிவந்து உதவிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமாருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story