சிதிலமடைந்து கிடக்கும் பழமையான முருகன் கோயில்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலமாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் பழனியில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. என்னும் திருக்குறளுக்கு இணங்க இறைவன் புகழை பேசுவதும் கேட்பதும் ஆன்மாக்களுக்கு புண்ணியம் தருவதாகும்.
உலக அளவில் முருக பக்தர்களை ஒருங்கிணைப்பதற்கான இந்த மாநாடு வரவேற்கத்தக்கது.கலை, இலக்கியம், பண்பாடு, ஆய்வு குறித்த தெய்வீக சிந்தனைகளுடன் பல்வேறு அமர்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பெரிய ஏற்பாடுகளைச் செய்து, இந்த மாநாடு இரண்டு நாட்கள் மட்டும் நடத்தப்படுவது போதுமானதா என்கின்ற கேள்வி எழுதுகிறது. "முந்து தமிழ் மாலையும் மொழிக்குத் துணையாம் முருகா என்னும் நாமங்களும் சொல்லச் சொல்ல இனிக்கக் கூடியவை." முருக பக்தியை வளர்க்கும் பக்தர் அமைப்புகள், மன்றங்கள் கூட மாநாடுகளை இரண்டு, மூன்று நாட்கள் நடத்துகிறார்கள்.
அப்படி இருக்கும்போது தமிழ்நாடு அரசு, உலக அளவில் பக்தர்களை திரட்டி, இந்த மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்தினால் அறிமுக கூட்டம் மட்டுமே நடத்த முடியும். இதில் அரசியல் துதி பாடல்கள் பாதி நேரத்தை ஆக்கிரமித்து விடும் என்பது நிதர்சனமான உண்மை. எனவே முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளை நினைவு படுத்தும் வகையில் ஆறு நாட்கள் முழுமையான ஒரு மாநாடாக இது நடத்தப்பட வேண்டும். மேலும், மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் பழமையான முருகன் தலங்களை மீட்டெடுக்கும் விதமாக, இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு திட்டம் வகுத்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து முக்கியத்துவ அடிப்படையில் தேர்வு செய்யப்படும் கோயில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
கோயில்கள் தான் வழிபாட்டின் ஆதாரப்புள்ளி. அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த சுள்ளங்குடி மற்றும் லால்குடி அருகே கோவண்டக்குறிச்சி போன்ற தலங்களில் உடனடியாக திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் ஆபத்தான நிலையில் பழமையான இக்கோயில் கட்டுமானமும் வழிபாட்டு மூர்த்திகளான முருகன் திருமேனிகள், பரிவாரங்களும் உள்ளன. எனவே இன்னும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் உள்ள நிலையில் மாநாட்டிற்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்ய இந்து சமய அறநிலைத்துறை முன்வரவேண்டும் என கோரிக்கை எழுந்தது.