ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தாலி செயின் பறிப்பு
கன்னியாகுமரி அருகே கோவளம், சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் செலின் மேரி (81). இவர் பார்வதிபுரம் களியன்காட்டில் உள்ள ஒரு சுய உதவி குழு தலைமை அலுவலகத்தில் கௌரவ தலைவராக இருந்து வருகிறார். சம்பவ தினம் காலை அலுவலகத்திற்கு செல்வதற்காக சிலுவை நகரில் இருந்து பஸ்ஸில் வடசேரி வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து குளச்சல் செல்லும் அரசு பஸ்ஸில் ஏறி களியங்காடு பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கி நடந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அங்கு சென்று பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கத் தாலி செயினை காணவில்லை. அந்த பகுதியில் எங்கு தேடியும் செயின் கிடைக்கவில்லை. எனவே டவுன் பஸ்சில் பயணித்த போது யாரோ மர்ம நபர்கள் நைசாக செயினை பறித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த செலின் மேரி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.