ஊட்டியில் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

ஊட்டியில் ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து 

ஊட்டியில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பஸ்களை, தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்ற வேண்டும் என ஏற்கெனவே தமிழக போக்குவரத்து துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று முறை அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. தமிழக முழுவதும் இதில் சுமார் 100 பஸ்கள் மட்டுமே பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுலா விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் வெளிமாநிலப் பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளின் விவரங்கள் 'ரெட் பஸ்' போன்ற டிக்கெட் பதிவு செய்யும் செயலிகளில் இருந்து நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை. அதை மீறி இயக்கப்பட்ட பஸ்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட நாகாலாந்து மாநிலம் உள்ளிட்ட பிற மாநில பதிவு எண் மூன்று பேருந்துகளை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., தியாகராஜன் நடவடிக்கை எடுத்தார்.

மேலும் 3 பஸ்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், "தமிழக அரசு உத்தரவின் படி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படுகிறது. முதலில் நாகலாந்து, அரியானா பதிவு எண் கொண்ட பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். இன்று முதல் பாண்டிச்சேரி, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்," என்றனர்.

Tags

Next Story