ராசிபுரம் தமிழ்மன்றம் சார்பில் ஆன்றோர் முற்றம்

ராசிபுரம் தமிழ்மன்றம் சார்பில் ஆன்றோர் முற்றம்

விருது வழங்கல் 

ராசிபுரம் தமிழ்மன்றம் சார்பில் ஆன்றோர் முற்றம் நிகழ்ச்சியில் பாவை விருதுகள் வழங்கபட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தமிழ்மன்றம் சார்பில் ஆன்றோர் முற்றம் - பாவை விருதுகள்-23 என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், மொழி பெயர்பாளர்கள், படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கும் நடைபெற்றது.

இவ்விழாவில் பாவைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். இதில் தலைமை விருந்தினராக மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் கோ.பாலசந்திரன் பங்கேற்று சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசினார்.

இவ்விழாவில் ஒடிசா மாநில சிறப்பு தலைமை ஆலோசகரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணனுக்கு ஆன்றோர் விருது, ஈரோடு சிந்தனைப்பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனுக்கு தமிழ் சேவைச் செம்மல் விருது, தமிழ் திரைப்பட இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவிற்கு தமிழ்த்திரை வித்தகர் விருது, தமிழ் எழுத்தாளர் பவா செல்லதுரைக்கு சிறந்த கதைச் சிற்பி விருதும் வழங்கப்பட்டது.

மேலும், புதினத்திற்கு இமையம், சுப்ரபாரதிமணியன் ஆகியோருக்கும், கவிதைக்கு கவிஞர் இளம்பிறை, கவிஞர் இசை, ஆகியோருக்கும், சிறுகதைக்கு சு.வேணுகோபால், மு.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும், சிறார் இலக்கியத்துக்கு மு.முருகேஷ், கா.உதயசங்கர் ஆகியோருக்கும், மொழி பெயர்பெயர்பு மற்றும் வரலாற்று ஆய்வாளர் விருது குறிஞ்சி வேலன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோருக்கும் தமிழ் இலக்கியச் செம்மல் என்ற விருதும் விழாவில் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து விழாவில் கோ.பாலசந்திரன் மேலும் பேசியது: தமிழ் மொழியில் ஏராளமான படைப்பாற்றல் மிக்கவர்கள் உள்ளனர். இவர்களை கெளரவித்து போற்றப்பட வேண்டியது அவசியம். விருதுகளில் சிறார் இலக்கியம், மொழி பெயர்ப்பு இலக்கியம் பெருமையுடையது. தற்போது குழந்தைகளின் அறிவு கூர்மைக்கு இடையில் குழந்தை இலக்கியம் படைப்பது என்பது கடினமான காரியம் என்பதால் இது சற்று கூடுதல் பெருமைக்குரியது.

அதே போல் மொழி பெயர்ப்பு என்பதும் சற்று கடினமானது. ஒரு மொழியில் இருப்பதை வேறு மொழியில் மொழி பெயர்பது குழப்பங்களை ஏற்படுத்தும். இதனை தாண்டி இதனை சிறப்பாக செய்வது என்பது சிறப்புக்குரியது. இப்படிபட்டி கடினமான படைப்புகளில் ஈடுபட்டுவருபவர்களை கெளரவிப்பது என்பது அவசியமானது. தமிழ் உலகில் என்னென்ன வாழ்வியல் அம்சங்கள் இருக்கிறதோ அதனை அனைத்தையும் இணைத்து விருது வழங்கி ஊக்குவிப்பது பாராட்டுக்குரியது.

வரலாற்றை எழுதாத சமுதாயத்தின் வரலாற்று கண்டிபிடிப்பது மிகவும் கடினமான காரியம். வரலாற்றை அறிந்து கொள்ள கல்வெட்டு, இலக்கியம், அகழ்வாராய்ச்சி முக்கியம். இதில் கல்வெட்டுகள் தவறை சொல்லலாம். இலக்கியங்கள் மிகைப்படுத்தலாம். விஞ்ஞானபூர்வமாக நடத்தப்பட்டு அகழ்வாராய்ச்சிகள் உண்மையை மட்டும் வெளிப்படுத்தும். இதன் மூலம் இலக்கியங்கள் சொன்னதை அகழ்வாராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுத்த முடியும். தமிழ் சமூகத்தில் உண்மையான பெருமைகளை உணராமல் இருப்பதும், இல்லாத பெருமைகளை ஏற்றி ஏற்றி சொல்வதும் தான் பெரும் குறை. உதராணமாக இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவன் தம்பி என்பது போன்று சொல்லப்பட்டது.

ஆனால் இது தவறு என்பதை வரலாறு, இலக்கிய படைப்புகள் மூலம் உணரமுடியும். தமிழரிஞர்கள் கூறியதை முழுமையாக நம்பிய காலம் இருந்தது. அவர்கள் வரலாற்று அறிஞர்கள் கிடையாது என்பது தற்போது உணர்ந்து வருகிறோம். தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் இது போன்ற உண்மையை சொல்ல தைரியம் வேண்டும்.

ஒரு தனி மனிதன் புத்தி கூர்மையுடன், தெளிவான சிந்தனையுடம், ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஆற்றல் இருந்தால் 20 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதற்கான ஆதாரமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது பாராட்டுக்குரியது. இன்றைய இளைஞர்கள் தங்களது பங்களிப்பை சமுதாயத்திற்கு செய்தால் நம் நாட்டை யாரும் வெல்லமுடியாது என்றார்.

விழாவின் முடிவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story