விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசின் தடை நீட்டிப்பு: வைகோ கண்டனம்
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அண்மையில் அறிவித்துள்ளது.
அதற்காக உண்மைக்கு மாறான பல செய்திகளையும் இட்டுக்கட்டி எடுத்துரைத்து தமது தவறான செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது மோடி அரசு. “2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பிறகும் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்று தடை நீட்டிப்பு ஆணையில்,
குறிப்பிடுகிற இந்திய ஒன்றிய அரசு, “விடுதலைப்புலிகளின் இயக்கம் தமிழ்நாட்டில் ரகசியமாக செயல்படுகிறது. அனைத்து தமிழர்களுக்குமான தனி நாடு என்ற கோரிக்கையில் இந்தியாவில் தமிழ்நாட்டையும் சேர்த்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு புலிகளின் இயக்கம் எதிரானது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது” என்ற அபாண்டமான பொய் குற்றச்சாட்டையும் புலிகள் அமைப்பின் மீது சுமத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இனப்படுகொலை செய்த அநீதியை எதிர்த்து அறவழியிலும்,
அமைதி வழியிலும் போராடிய விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் பாதுகாப்பு அரணாகவே செயல்பட்டு வந்தது; வருகிறது. இந்திய அரசு புலிகள் இயக்கத்தை வன்முறை அமைப்பாக சித்தரித்து தடை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் நான் வழக்காடியபோது, இதுகுறித்து பல்வேறு சான்றுகளுடன் விளக்கியுள்ளேன். இலங்கைத் தீவில் தமிழீழ மக்கள் அந்நாட்டு அரசினாலேயே படுகொலைக்கு ஆளானார்கள்.
அவர்களின் சொத்துக்கள், உடமைகள், நிலங்கள் ஆகியன இராணுவத்தின் துணையோடு கபளீகரம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் இதனை எதிர்த்து குரல் எழுப்பியபோது, அவர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களின் உறவுகள் அரசின் “வெள்ளை வேனில்” கடத்தி செல்லப்பட்டு இன்று வரை எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் அகதிகளாய் தமிழீழ மக்கள் அங்கே இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள். சிங்கள இனவெறி அரசு தமிழீழ பகுதியில் இந்துக் கோவில்கள், கிறித்தவ ஆலயங்கள், மருத்துவமனைகள், கல்விச்சாலைகள் என சகல இடங்களிலும் பேரழிவு விளைவிக்கும்,
நச்சுக்குண்டுகளை வீசி அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தும், தமிழீழ பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும், தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரச பயங்கரவாதத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் அந்நாட்டு ஆட்சியாளர்களைக் கூண்டிலேற்றி தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் நான் வலியுறுத்தினேன்.
சுதந்திரமான பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழம் மலர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் ஈழப் பகுதிகளில் இன்னமும் தொடர்கின்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்றும் ஜூன் 1, 2011 அன்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தரங்கில் நான் வற்புறுத்தினேன். உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்களும், மனித உரிமைகளில் அக்கறை கொண்டவர்களும் இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாத மோடி தலைமையிலான இந்திய அரசு, சிங்கள இனவெறி அரசை திருப்திப்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்திருக்கிறது. இ
லங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகள் அடங்கிய தமிழீழக் கோரிக்கையை மட்டுமே முன்வைத்து புலிகள் இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறதே தவிர, இந்தியாவில் உள்ள எந்தப் பகுதியின் மீதும் அவர்கள் உரிமை கொண்டாடவில்லை என்பது உலகமே அறிந்த உண்மையாகும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கோ,
இறையாண்மைக்கோ எதிராக விடுதலைப்புலிகள் ஒருபோதும் செயல்பட்டதில்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பகை நாடுகளுடனும் எந்த வகையான உறவையும் விடுதலைப்புலிகள் இயக்கம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் இலங்கை அரசு சீனா முதலான இந்தியாவின் பகை நாடுகளுடன் நெருங்கி உறவாடி, அந்நாடுகளிடம் பொருளாதார உதவி பெற்று, இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தளங்களை அமைப்பதற்கும் துணையாக செயல்பட்டு வருகிறது என்பதை இந்திய அரசு எண்ணிப் பார்க்கவில்லை.
இராஜீவ்காந்தி அவர்களின் கொலையை சுட்டிக்காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மறைந்துவிட்டார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு புலனாய்வுக்குழு 20 ஆண்டுகாலமாக எவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தி இறுதியில்,
கலைக்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும். இந்திய அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.