ஜவுளிக்கடை அதிபரிடம் ஒன்றரை கோடி மோசடி
கைது
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவமுத்து (வயது 50). ஜவுளிக்கடை அதிபர். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சேலத்தை சேர்ந்த பிரபல பாத்திரக்கடை உரிமையாளரான கிருபாகரன் (47) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு தனக்கு அறிமுகமானார். அப்போது அவர் என்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக வங்கிகளில் இருந்து ரூ.10 கோடி வரை மானியம் பெற்று தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.
இதற்காக ரூ.1½ கோடி முன்பணமாக பெற்று கொண்டார். மேலும் சில ஆவணங்களையும் வாங்கி கொண்டார். ஆனால் இதுவரை எனக்கு வங்கிகளில் இருந்து மானியம் பெற்று கொடுக்கவில்லை. தற்போது வாங்கிய பணத்தையும் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவமுத்துவிடம் வங்கிகளில் மானியம் பெற்று தருவதாக கூறி கிருபாகரன் ரூ.1½ கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.