ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு

ஒரு கோடி மரக்கன்றுகள் நட இலக்கு

விருதுநகர் ஆட்சியர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மூலம் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே - 22 உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 5 இலட்சம் மரக்கன்றுகளும், ஜீன்-5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 10 இலட்சம் மரக்கன்றுகளும் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

மேலும், இதில் பல்வேறு அரசு துறைகள், தன்னால்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரும் கலந்து கொண்டு, மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதம் முழுவதும், நமது மாவட்டத்தில்; மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த சீரிய முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நட வேண்டும்.

தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி, நல்ல மழைப்பொழிவு இருப்பதால், அனைத்து நீர் நிலைகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வருகின்றது. அதனை பயன்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் மரம் நடவேண்டும். “வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல் ஆளுக்கொரு மரம்” என்று இந்த மாதத்தில் அனைவரும் மரம் நட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story