வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
விபத்து
பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் திருச்சி சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்றுள்ளனர்.
கார் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே சின்னாறு பகுதியில் சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, அதே பகுதியில் சென்று ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி பக்கவாட்டில் உருண்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தனியார் டயர் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியரான செங்குணம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் நாகேந்திரன் வயது 38, என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த நித்தியானந்தம், சூர்யா. சந்தோஷ் ஆகியோர் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மங்கள மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த திடீர் சாலை விபத்தால், சின்னாறு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.