சேலத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி

சேலத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி ஒருவர் பலி

விபத்து

சேலத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் சுமார் 1 மணியளவில் ஆத்தூர் நோக்கி சரக்கு வாகனம் அதி வேகமாக சென்றது. அப்போது மின்னாம்பள்ளி ஊருக்குள் இருந்து தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்த டூவீலர் மீது சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் அவ்வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது வாகனம் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த அச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளியான மாணிக்கம் (47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த சம்பத் (55) மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த 3 பேர், நடந்து சென்ற பெண் ஆகிய 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த காரிப்பட்டி போலீசார் உயிரிழந்த மாணிக்கத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த சம்பத் உள்பட 5பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சம்பத்திற்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சரக்கு வாகனம் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story