தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி
தேனீ கொட்டியதில் பலியானவர்
ஓசூர் அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (39) இவர் கடைகளுக்கு மசாலா பொருட்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இன்று கெலமங்கலம் ராயக்கோட்டை சாலையில் கொத்தூர் அருகே ஓரிடத்தில் கோபால் காலை கடன் கழிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து அவரை துரத்தி துரத்தி தாக்கியுள்ளது. இதில் தேனீக்கள் கொட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். அதேபோல அந்த பகுதியில் காலை கடன் கழிக்க சென்ற சிக்கனகுட்டா கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சென்னப்பன் (65) என்பவரையும் தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டி உள்ளது. இந்த தாக்குதலில் சென்னப்பனும் படுகாயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். சென்னப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த கோபாலுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.