கிணறு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழப்பு

கிணற்றில் வீழ்ந்து பலி
தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டி கிராயத்தை சேர்ந்த, சரண்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், கிணறு வெட்டும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த கிணறு வெட்டும் பணியில் அதியமான் கோட்டை அடுத்த புறவடை பகுதியை சேர்ந்தவர்கள் செய்து வந்தனர். சுமார் 75 சதவீதம் முடிந்த நிலையில் நேற்று மாலை மேலும் ஆழப்படுத்தும் பணி செய்ய, கிரேன் ரோப் மூலம் மாரியப்பன் மற்றும் அபிமன்னன் இருவரும் இறங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கிரீன் ரோப் அறுந்துள்ளது. அப்போது இரண்டு பேரும் சுமார் 70 அடி ஆழத்தில் இருக்கும் கிணற்றுக்குள் விழுந்தனர். இதில் தவறி விழுந்ததில் மாரியப்பன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அபிமன்னன் தலை மற்றும் வயிற்று பகுதியில் படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தருமபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள், காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாரியப்பன் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
