இணையவழி வேலை - பள்ளி காசாளரிடம் ரூ. 29.49 லட்சம் மோசடி
கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி காசாளரின் கைப்பேசியின் வாட்ஸ்ஆப் செயலிக்கு பகுதி நேர வேலை என்றும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் அதிக லாபம் பெற முடியும் எனவும் தகவல் வந்தது. இதை நம்பிய காசாளர் தனது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்தபோது டெலிகிராம் செயலிக்கு சென்றது.
அதில் இருந்த போலியான நபர்கள் தாங்கள் இந்தப் பகுதி நேர வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டுவதாக ஆசை வார்த்தைகள் கூறினர். இதையடுத்து, வீடியோக்களுக்கு ரேட்டிங் ஸ்டார் கொடுத்தல், விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், புகைப்படம், வீடியோக்களை பகிர்தல் உள்ளிட்ட டாஸ்குகளை செய்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என தகவல் வந்தது. முதலில் ரூ. 100 அனுப்பிய இவருக்கு ரூ. 300 ம், ரூ. 5 ஆயிரம் அனுப்பியதற்கு ரூ. 9 ஆயிரமும் கிடைத்தது. ஆனால், இத்தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல், தனியாக வாலட் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு தவணைகளாக ரூ. 29.49 லட்சத்தை இணையவழி மூலம் அனுப்பினார். ஆனால், அவருக்கு எந்தத் தொகையும் கிடைக்காததால், ஏமாற்றமடைந்தார். இது குறித்து காசாளர் தஞ்சாவூர் இணையதளக் குற்றக் காவல் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.