ஆன்லைன் மூலம் ரூ. 12.82 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் ரூ. 12.82 லட்சம் மோசடி

கோப்பு படம்


தஞ்சாவூரில் இணையவழி மூலம் இருவரிடம் ரூ.12.82 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே வேலை தேடிக் கொண்டிருக்கும் 24 வயது இளைஞரின் பேஸ் புக் மூலம் மர்ம நபர் ஜூலை மாதம் அறிமுகமானார். அப்போது, இணையவழி மூலம் வணிகம் செய்யலாம் என்றும், அதற்கு பண பரிவர்த்தனை, இருப்பு பராமரிப்பு, சர்வர் பிரச்னை, வழக்குரைஞர் கட்டணம் என பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறினார்.

இதை நம்பிய இளைஞர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு இணையவழி மூலம் பல்வேறு தவணைகளில் ரூ. 5 லட்சத்து 97 ஆயிரத்து 400 செலுத்தினார். ஆனால், அதன் பின்னர் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாமல் போன இளைஞருக்கு, ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து இளைஞர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இணையவழி மூலம் வேலை தருவதாகவும், டாஸ்குகளை நிறைவேற்றினால் ரேட்டிங் உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் ஆகஸ்ட் மாதம் தகவல் வந்தது. இதை நம்பிய ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் மர்ம நபரின் வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்து 21 செலுத்தினார்.

அதன் பின்னர் மர்ம நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், மோசடி நிகழ்ந்துள்ளது குறித்து தஞ்சாவூர் இணையதள குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story