இணையவழியில் ரூ. 23 லட்சம் மோசடி- சைபர் கிரைம் விசாரணை

இணையவழியில் ரூ. 23 லட்சம் மோசடி- சைபர் கிரைம் விசாரணை

பைல் படம் 

திருச்சியில் இணைய வழியில் இருவேறு சம்பவங்களில் இருவரிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அம்ப்ரோஸ் (61). ரயில்வே ஒப்பந்ததாரரான இவா் ரயில்வே பணிமனைக்கு 146 சக்கர நாற்காலிகள் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தாா். பின்னா் அவற்றை தயாரிக்க இணைய வழியில் விளம்பரம் கொடுத்தாா். இதையடுத்து, கட்செவி அஞ்சல் மூலம் (வாட்ஸ் அப்) அவரை தொடா்பு கொண்ட மா்ம நபா், தேவையான நாற்காலிகளை தன்னுடைய நிறுவனத்தில் செய்து தருவதாகவும் அதற்கு ரூ.5 லட்சம் ஆகும் எனவும் அதற்கான கொட்டேஷன் கொடுத்துள்ளாா்.

இதை நம்பிய அம்புரோஸ் உடனடியாக அந்த மா்ம நபா் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.5 லட்சத்தை ஆா்டிஜிஎஸ் மூலமாக அனுப்பி வைத்தாா். அதன் பின்னா் அந்த மா்ம நபரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பலமுறை தொடா்பு கொண்டபோதும் பதில் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அதேபோல் திருச்சி திருவானைக்கா அழகப்பா தெரு பகுதியைச் சோ்ந்த நபா் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு இணைப்பை பதிவிறக்கம் செய்தாா். அப்போது அதில் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய அவா், மோசடி நபா்கள் கூறிய 8 வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18.45 லட்சம் அனுப்பி வைத்தாா். பின்னா் அந்த மா்ம நபா்கள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை.முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றி விட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story