தஞ்சாவூர் சரகத்தில் 2.46 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல்

தஞ்சாவூர் சரகத்தில் 2.46 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல்

வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி.வசந்தன்

தஞ்சாவூர் சரகத்தில் 2023 - 24 ஆம் நிதியாண்டில் 2.46 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தனர் என வருமான வரித்துறை மதுரை முதன்மை ஆணையர் டி. வசந்தன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற வரி செலுத்துவோர், தொழில், வர்த்தகம் செய்வோர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியது: நாட்டின் நிர்வாகத்துக்கு வருமான வரி முதுகெலும்பாக உள்ளது. நம் நாட்டில் ஏறத்தாழ 61 கோடி பேருக்கு பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 2023 - 24 ஆம் நிதியாண்டில் 8.18 கோடி மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தனர்.

இதில், திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர் சரகத்தில் 4.13 லட்சம் பேர் பான் அட்டைகள் வைத்துள்ள நிலையில், 2.46 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தனர். அதாவது, வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 56 விழுக்காடு பேர் மட்டுமே. மீதமுள்ள 44 விழுக்காடு பேர் தாக்கல் செய்யவில்லை. எனவே, தகுதியுடைய அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய முன் வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதும் மக்கள் தாக்கல் செய்யும் வருமான வரி படிவங்களில் 0.25 விழுக்காடு மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறது.

மீதமுள்ள 99.75 விழுக்காடு படிவங்கள் மக்கள் மீதான நம்பிக்கை காரணமாக மதிப்பீடு செய்யப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, அதற்கேற்ப பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். பான் அட்டை வைத்துள்ள அனைவரும் வரி செலுத்தினால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் உலக அளவில் நம் நாடு மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேற வாய்ப்புள்ளது" என்றார் வசந்தன். இக்கூட்டத்தில் வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் து.நித்யா, உதவி ஆணையர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story