பாம்பாறு அணையில் நீர் திறப்பு - 4000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று பாசனத்திற்காக 4,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 14.02.2024 முதல் 120 நாட்களுக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்ததாவது: பாம்பாறு நீர்த்தேக்கம் 1983 ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு நீர்த்தேக்கத்தின் முழு நீர் மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி.க.அடி ஆகும். பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு (பசலி 1433) ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 14.02.2024 இன்று முதல் 120 நாட்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி, ஒபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சார்ந்த 2,501 ஏக்கர் நிலங்களும், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய 4 கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றது. முதல் மண்டலத்திற்கு 3 கி.மீ - 11.725 கி.மீ IR, II மற்றும் III' பிரிவு கால்வாய் மூலம் 2501 ஏக்கரும், இரண்டாவது மண்டலத்திற்கு 11.725 கி.மீ -31.500 கி.மீ வரை பிரதான கால்வாய் மூலம் 1499 ஏக்கர் என மொத்தம் 4000 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
எனவே, விவசாய பெருமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு விவசாயிகளிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், மாதையன், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணி, பாலாஜி, ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைவாசன், கொண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி ராஜா, முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.