சங்கரன்கோவிலில் ரூ.1.25 கோடியில் நூலகம் - அறிவுசாா் மையம் திறப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகில் நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.1.25 கோடியில் மதிப்பில் நூலகம்-அறிவுசாா் மையம் கட்டப்பட்டுள்ளது. இதில், பொது பிரிவு வாசிப்பு பகுதி, மகளிா் வாசிப்பு பகுதி, கணினி, எல்இடி பொருத்தப்பட்ட புரொஜக்டா், குழந்தைகள் அறிவுப்பூா்வமாக விளையாடும் பகுதி ஆகியவை நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு போட்டித் தோ்வுக்கு பயன்படும் ஏராளமான புத்தகங்களும் உள்ளன. நூலகம்-அறிவுசாா் மையம் திறப்பு நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, தனுஷ் எம். குமாா் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, நகராட்சி ஆணையா் சபாநாயகம், நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, நூலகா் முருகன்,கோமதிஅம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி முதல்வா் பழனிச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்று நூலகத்தைப் பாா்வையிட்டனா்.