கொண்டிசெட்டிபட்டியில் புதிய ரேஷன் கடை திறப்பு - எம்பி பங்கேற்பு
ராஜ்யசபா எம்.பி. ராஜேஸ்குமாரின் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டிசெட்டிபட்டியில் ரூ. 14.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ் குமார் எம்பி விழாவில் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி பேசியதாவது..... கொண்டிசெட்டிபட்டி ரேஷன் கடை, இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த கடைக்கு ரூ. 14.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையின் மூலம், 412 முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்கள், 554 முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுதாரர்கள், 7 முதியோர் உதவித்தொகை பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், 19 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், 48 சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள், 1 போலீஸ் ரேஷன் கார்டுதாரர் என மொத்தம் 1,041 குடும்ப ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவார்கள்.நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 895 ரேஷன் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 45 ரேஷன் கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 5 ரேஷன் கடைகள் என மொத்தம் 945 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன என கூறினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு, நகராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சரவணன், நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், திமுக மாநில நிர்வாகி ராணி, நகர திமுக செலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உட்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.