ஜருகுமலையில் ரூ.13 லட்சத்தில் ரேஷன் கடை திறப்பு !
ரேஷன் கடை
ஜருகுமலையில் வசிக்கும் பொதுமக்கள் 14 கிலோ மீட்டர் தூரம் சென்று மலையடிவாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.13 லட்சத்தில் ஜருகுமலையிலேயே புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 106 முழு நேர, 36 பகுதி நேர என மொத்தம் 142 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதையொட்டி 70 ஆயிரத்து 447 ரேஷன் கார்டுகள் மூலம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 884 பேர் பயனடைந்து வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் 1,262 முழு நேர, 470 பகுதி நேர என மொத்தம் 1,732 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு விரைவில் பொருட்கள் வழங்கும் வகையில் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 81 ஆயிரத்து 652 மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 480 கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ரூ.13.10 கோடியில் 103 புதிய கட்டிடங்கள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 47 கட்டிடங்கள் கட்டி புதிய கட்டிடத்தில் புதிய ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஜருகுமலையில் வசிக்கும் பொதுமக்கள் 14 கிலோ மீட்டர் தூரம் சென்று மலையடிவாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.13 லட்சத்தில் ஜருகுமலையிலேயே புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. அதன்படி கடந்த மாதம் முதல் ஜருகுமலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story