சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் கோட்டம் சார்பில் வார இறுதி நாட்கள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்களையொட்டி, சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்கு ஏற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதாவது, சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் வசதிக் காக அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சீபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.