திருவையாறு நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு

திருவையாறு நகராட்சியுடன்  கிராமங்களை இணைக்க எதிர்ப்பு
மனு அளித்த கிராம மக்கள்
தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி மற்றும் வில்லியநல்லூரை இணைக்கக்கூடாது என வலியுறுத்தி அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், திருவையாறு அருகே உள்ள விளாங்குடி, வில்லியநல்லூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றிய நிர்வாகத்தில் விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் பேர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இந்நிலையில், திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில், திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 2 ஊராட்சிகளில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு 100 நாள் வேலை திட்டம்தான் உறுதுணையாக உள்ளது. திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சி களை இணைத்தால், 100 நாள் வேலை திட்டம் இல்லாமல் கூலித் தொழி லாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். மேலும், விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்களின் பயனும் எங்களுக்கு கிடைக்க வழியில்லாமல் போய்விடும். சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர் வரி போன்றவை பல மடங்கு உயர்ந்து விடும்.

இவற்றை கூலித் தொழிலாளர்களான எங்களால் செலுத்த இயலாத நிலை ஏற்படும். மேலும் தமிழக அரசின் இலவச பசுமை வீடுகள், மத்திய அரசின் இலவச வீடுகள் போன்ற திட்டங்களை இழக்க நேரிடும். எனவே, விளாங்குடி, வில்லியநல்லூர் ஊராட்சிகளை தரம் உயர்த்தப்பட உள்ள திருவையாறு நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். ஓட்டுநர்கள் மனு இதேபோல, மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன சட்ட மசோதாவை திரும்ப பெற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தாய்நாடு அனைத்து ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் தலைவர் விஜயகுமார், செயலாளர் உமா மகேஸ்வரன், பொருளாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Next Story