யானை வழித்தடத்திற்கு எதிர்ப்பு; செல்போன் டவர் மீது வாலிபர் போராட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2007 - 2008ம் ஆண்டில் புலிகள் காப்பகம் அமல்படுத்தப்பட்டு, புலிகள் காப்பக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழக அரசு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வனத்துறையும் 161 பக்கங்கள் கொண்ட புதிய யானைகள் வழித்தடங்கள் கண்டறிந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 35 கிராமங்களில் வசிக்கும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி வனத்துறை அமல்படுத்தியுள்ள சட்டத்தை திரும்ப பெறக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர் .
யானை வழித்தட புதிய அறிக்கை வெளியிட்ட அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதியில் வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் யானை வழித் தடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க உறுப்பினரான மணி வர்மா என்ற இளைஞர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த கூடலூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இளைஞர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து யானை வழித்தடம் அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே கீழே இயங்குவதாக தெரிவித்தார். சுமார் அரை மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் வாலிபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து டவரில் இருந்து கீழே இறங்கினார். காவல்துறையினர் வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.