பேராவூரணியில் திருமண மண்டபத்தை தனியாருக்கு ஏலம் விட எதிர்ப்பு

பேராவூரணியில் திருமண மண்டபத்தை தனியாருக்கு ஏலம் விட எதிர்ப்பு

பேரூராட்சி அலுவலகம்

பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தை தனியாருக்கு ஏலம் விடாமல் பேரூராட்சி நிர்வாகமே நடத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தை தனியாருக்கு ஏலம் விடாமல் பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக நடத்த வேண்டும் என 11 ஆவது வார்டு பேரூராட்சி உறுப்பினர் மகாலட்சுமி சதீஷ்குமார் தஞ்சை ஆட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது, "பேராவூரணி நகரின் மையப்பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, கடந்த ஆண்டு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை தனியாருக்கு கடந்த பல ஆண்டுகளாக மிக குறைந்த வாடகைக்கு ஏலம் விடப்பட்டு, ஏலம் எடுத்தவர்கள் திருமணம், காதணி விழா, மொய் விருந்து உள்ளிட்ட வைபவங்களுக்கு அதிக வாடகைக்கு விடுகின்றனர். கடந்த 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.6.8 லட்சத்திற்கு மண்டபம் ஏலத்துக்கு விடப்பட்டு, இந்த நிதியாண்டு 2024 மார்ச் 31 வரை,

ஏலக்குத்தகைத் தொகை, ஏலம் எடுத்த தனிநபரால் பேரூராட்சிக்கு செலுத்தப்படாமல் உள்ளது. தனியாருக்கு குறைந்த ஏலத்துக்கு விடப்பட்டு, இதுவரை குத்தகையும் செலுத்தாத நிலை உள்ளதால், பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக மிகக்குறைந்த வாடகையாக திருமணம்,

காதணி போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்து வாடகைக்கு விட்டால் ஆண்டிற்கு குறைந்தது 200 நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு குறைந்த பட்சம் ரூ.20 லட்சம் வருமானமும் கிடைக்கும். சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த வாடகையில் மண்டபம் கிடைப்பது உதவியாகவும் இருக்கும் என்பதால்,

நடப்பாண்டிலிருந்து பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக மண்டபத்தை ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story