சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு
சின்னதாராபுரத்தில் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆலோசனை. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையின் கடைமடை பகுதி கரூர் மாவட்டமாகும். அமராவதி அணைக்கு பல்வேறு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இதில் அமராவதி ஆற்றின் துணை ஆறான, கேரள மாநிலம் வழியாக வழிந்தோடி வரும் சிலந்தி ஆற்றில், வட்டவடா என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதற்கு முறையாக நதிநீர் தாவா உரிமை பெற்ற தமிழக அரசிடம் அனுமதி கேட்கவில்லை. மேலும் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, மத்திய அரசிடமும் முறையாக அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டி வருவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அணை கட்டினால் அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்படும்.
இதனால் அமராவதி ஆற்றை நம்பி இருக்கும் ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்த அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அம்மன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் , கோபாலகிருஷ்ணன், ரகுநாத் பெரியசாமி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையின் முடிவில் மே 26 ஆம் தேதி கேரளா எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.