எதிர்கட்சிகளின் நிலைபாடு பயனளிக்காது: பாஜக வேட்பாளர்
பாஜக வேட்பாளர்
பிரதமர் யார் என்பதை மனதில் வைத்தே நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் என்பதால் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகள் பயனளிக்காது என்றும் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவரும்,
அக்கட்சியின் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான Dr. K.P. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.. நாமக்கல் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி இராமலிங்கம் இராசிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறிய அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் கவுரவ நிதி, அடுத்த ஆண்டு முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
விவசாயிகளுடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இருந்த ஆட்சிகள் எதுவுமே விவசாயிகளுக்கு நேரடியான பலன்களை வழங்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில்தான் நேரடியாக ஒவ்வொரு விவசாயிக்கும் 5 காலமாக சுமார் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் கௌரவ நிதி ஒவ்வொரு விவசாயியும் பெற்றுள்ளார். அடுத்த முறை ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் விவசாய ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் பெறுகின்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதுபோன்ற நல்ல அம்சங்கள் கொண்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வில்லன் என்று கூறுகிறார். போதைப் பொருள் விற்பவர்களுக்கு துணை போகும் திமுக தேர்தல் அறிக்கை ஹீரோவாக அமைந்துவிடுமா? என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு, குடும்பத்தில் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் போலி மதுபானம் தயாரித்து விற்கிறார்கள். திருச்செங்கோட்டில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் போலி மதுபானம் தயாரித்து திமுக நிர்வாகிகள் விற்கிறார்கள். இதுகுறித்து காவல்துறை வழக்கு போட்டு முறையாக, நடவடிக்கை மேற்கொண்டு விசாரிக்கவில்லை.
ஒரு மாநில விவகாரம் மட்டுமல்லாது தேசிய அளவிலான நலனை நோக்கித்தான் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதிகளை, மோடியின் உத்தரவாதம் வெளியிட்டுள்ளோம். ஈரோடு- திருச்செங்கோடு- நாமக்கல்-துறையூர்- பெரம்பலூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்படும். இதன் மூலம் நாமக்கல், பெரம்பலூர் பாராளுமன்ற பகுதிகள் பலன் பெறும். நாமக்கல் மாவட்டத்தில்,
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருமணிமுத்தாறு- காவேரி ஆறுகள் இணைக்கப்படும். பாசன வாய்க்கால்கள் நவீனப்படுத்தப்படும். நாமக்கல்லை தலைமை இடமாகக் கொண்டு, தென்மண்டல விவசாய விளைபொருள் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக, தரமான உயர்கல்வி வழங்கும் வகையில், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் நாமக்கல் மற்றும் சங்ககிரியில் அமைக்கப்படும். கொல்லிமலை,
தேசிய சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும். ரோப் கார், நவீன படகு இல்லம், கண்காட்சி அரங்கங்கள் அறப்பளீஸ்வரர் ஆலயம் சிறப்புகள் அறிந்து கொள்ளும் வகையில் தேசிய சுற்றுலா மையம் அமைக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும். நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பளம் வழங்க முயற்சி எடுக்கப்படும்.
3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைத்த பிறகு, நாமக்கல் வழியாக பெங்களூர்- நாகர்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். அதற்கான உத்தரவாத்தை மோடி அளித்துள்ளார். கொல்லிமலையில் விளையும் உயர்ரக மிளகு, இந்தோனேசியா, மொரிசியஸ்,கேரளா விளவங்கோடு ஆகிய பகுதிகளில் விளையும் மிளகோடு கலந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். எனவே, உயர்ரகமான கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி செய்யப்படும். மிளகு பறிப்பின்போது ஏற்படும் விபத்தால் உயிரிழப்பவர்களுக்கு முன்தொகை கட்டாமலேயே 25 லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினராக செய்யக்கூடிய பணிகளை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். ஏற்கனவே பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக பதவிகள் வகித்த போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து நாமக்கல் வழியிலான சேலம்-கரூர் இருப்பு பாதை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்று தந்தேன். எனவே அதுபோன்றே,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மட்டுமல்லாமல் மாநில வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன். பிரதமர் நரேந்திர மோடி என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த திட்டங்களை நான் செய்து முடிப்பேன். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னேற்றத்திற்கு எதையும் கேட்டுப்பெற்று மக்களுக்கு வழங்குவேன். தேர்தல் வாக்குறுதிகள் ஆண்டுக்கு ஆண்டு மாறும். சிறிய கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். பிரதமர் நரேந்திர மோடி வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம்,
543 நாடாளுமன்ற தொகுதிக்கும் பிரதமர் வேட்பாளர் என்ற முறையில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யும் பிரதமர், தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தில் மட்டுமே 144 சட்டமன்ற தொகுதிகள் பாஜக போட்டியிடும் 24 பாராளுமன்ற தேர்தலில் அடங்கும். எனவே பாஜக வெற்றிக்காக பிரதமர் வந்து செல்கிறார். இந்த விவரம் தெரியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரின் பயணம் குறித்து அர்த்தமற்ற விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னையில் பிரச்சாரம் செய்தபோது அங்குள்ள மக்கள் அவ்வளவாக ஆதரவு தெரிவிக்கவில்லை,
என்பது எல்லோருக்கும் தெரியும். பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்கிறபோது அவர் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் செய்வது இயல்பான ஒன்றாகும். ஆனால் இந்தியா கூட்டணி யார் பிரதமர் என்று தெரியாமலேயே தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். பாஜக கேட்டுள்ள 100 கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. மத்திய அரசு நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கும் மானியம்,
வங்கி கணக்கு நிதி அளித்தல், ரேஷன் மானியம், கொரோனா தடுப்பூசி, கொரோனா சிறப்பு முகாம் நிதி, பணியாளர்களுக்கான சம்பளம், 100% ஜல்ஜீவன் திட்ட நிதி உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளாமல், மத்திய அரசு குறைவாக தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதாக திமுகவினர் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியிட்டுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறிய K.P. இராமலிங்கம், நாட்டு மக்கள் அதை நம்பவில்லை. 414 தொகுதிகளுக்கு மேலாக பாஜக வெற்றி பெறும் என்று மக்கள் உறுதியாக உள்ளனர்.
இந்தியா கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, பொய்யான வாக்குறுதிகள் கொண்டதாகும். அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த தேர்தல் அறிக்கையும் முழுமையாக அவர்கள் நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகவே அவர்கள் வாக்குறுதிகளை அளிக்கின்றனர். பிரதமர் யார் என்று தெரியாமலேயே இந்தியா கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதற்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை. ஏற்கனவே குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை என்று கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வெளியிட்டார்கள்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை பொறுத்தவரை பொய் வாக்குறுதி ஆகும். 543 தொகுதிகள் கொண்ட பாராளுமன்ற தேர்தலுக்கு இவர்கள் அளித்துள்ள வாக்குறுதி அதிகாரமற்றதாகும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கருத்து ஒற்றுமை இல்லை. தற்போது, தமிழ்நாட்டில் மோடி வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கான தேர்தல் தான் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாத காலமாக நான் இதை வலியுறுத்தி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடியை நான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆக பார்க்கின்றேன். மனிதாபிமானம் மக்கள் நலன் தேச பாதுகாப்பு தேச நலம், தேசத்தின் தொலைநோக்கு பார்வை, குழந்தைகள் இளைஞர்களின் எதிர்கால நீடித்த நிலையான வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் செயல்படுகிறார். குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மோடி இலவசமற்ற மின்மிகை மாநிலமாக மேம்படுத்தி இருந்தார்.
பிரதமர் 24 மணி நேரமும் தேசத்தின் வளர்ச்சிக்காகவே சிந்திக்கிறார். எம்ஜிஆர், கருணாநிதி ஆகிய இரு தலைவர்களும் என்னை தேசிய அரசியலுக்காக வளர்த்தெடுத்தார்கள் என்பதே உண்மை. இந்த இரு தலைவர்களும் இல்லாத நிலையில், நான் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை தகுதியுள்ள தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன். இந்தியாவில் மோடி போன்ற தகுதி உள்ள தேசிய தலைவர்கள் இல்லை. இந்தப் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக,
பிஜேபி தனித்தனியாக போட்டியிடுவதால் திமுகவுக்கு ஆதாயமா? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், தேர்தலில் முடிவுகள் தான் பதில் சொல்லும் மக்கள் மனநிலை அப்படி இல்லை. மோடி வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இன்றைய கேள்வி. தமிழ்நாடு அரசியல் 1980-ல் இதேபோன்ற அரசியல் சூழ்நிலை நிலவியது. தேசத்திற்கு யார் தலைமை ஏற்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்கிறார்கள்.
இதை உணர்ந்துதான் திமுகவினர் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து வருகிறார்கள். காரணம் திமுக, அதிமுகவின் வாக்குகள் சிதறிவிட்டன. தமிழகத்தின் தேர்தல் நிலைப்பாடுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்காது.
எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார் என்றும் பாஜக மாநில துணைத்தலைவரும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான டாக்டர் K.P. இராமலிங்கம் உறுதிபட தெரிவித்தார்.