மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
சஞ்சுவிகாசினி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த காவேரி ஆர்எஸ் பகுதியை சேர்ந்த விஜயகுமார், தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் சஞ்சுவிகாசினி (வயது 18). இவர், தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கடந்த 30ம் தேதி அவரது பெற்றோர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். ஆனால், சஞ்சுவிகாசினி மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்து, சுதா மருத்துவமனையின் மருத்துவர்கள் சஞ்சுவிகாசினியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சஞ்சுவிகாசினியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் தாமாக முன்வந்து, அதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் மையத்தின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியுடன், சுதா மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவினர் மற்றும் உடல் உறுப்புகள் தானம் பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நோயாளிகளுக்கு வழங்கிட சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளின் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை அறுவை சிகிச்சை செய்து சஞ்சுவிகாசினியின் உடல் உறுப்புகளான கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், இரண்டு கைகள், சிறுகுடல் போன்றவற்றை தானமாக பெற்றனர்.
இதையடுத்து சஞ்சுவிகாசினியின் உடலுக்கு சுதா மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சஞ்சுவிகாசினியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கருங்கல்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. இத்தகவலை ஈரோடு சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார். மூளைச்சாவு அடைந்த சஞ்சுவிகாசினி அவரது உடல் உறுப்புகளை தானம் அளித்ததன் மூலம் ஏராளமான மனித உயிர்களை காத்துள்ளார்.