உடல் உறுப்புகளை தானம்: உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் விழுப்புரம் வழுதரெட்டி கவுதம் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் அராஜகன் (26) என்பவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட காரணத்தினால் அவரின் பெற்றோர், அராஜகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து, அவரது 2 சிறு நீரகங்கள், கல்லீரல் மற்றும் இருதயம் ஆகிய வற்றை தானமாக வழங்கினர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அராஜகனின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத்தலைவர் சித்திக்அலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர் அராஜகன் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மரணமடைந்த அராஜகன் எம்.பி.ஏ. பட்டம் பெற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது தந்தை கலியமூர்த்தி, காவல்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தாயார் புவனேஸ்வரி, நன்னாடு அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.