அங்ககப் பண்ணையம் மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம்

அங்ககப் பண்ணையம் மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம்
விவசாயிகள் பயிற்சி
அங்ககப் பண்ணையம் மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம் வேளாண் துறை சார்பில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) எஸ்.ராணி அறிவுறுத்தலின்படி, அட்மா திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பற்றிய பயிற்சி காலகம் கிராமத்தில் நடைபெற்றது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்றுப் பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இடுபொருட்கள் மற்றும் உபகரணங்கள், அட்மா திட்டத்தின் மூலம் தொழில்நுட்பங்கள் உள் மாவட்ட பயிற்சி, வெளி மாநில பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, செயல் விளக்கங்கள் ஆகியவை பற்றி எடுத்துக் கூறினார். பேராவூரணி வட்டார இயற்கை விவசாயி இரா. கமலக்கண்ணன்

பேசுகையில், 'அங்ககப் பண்ணையம் மற்றும் இடுபொருள்கள் உற்பத்தி பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து மீன் அமிலம், ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை பற்றிய செயல் விளக்கம் அளித்தார். இவை பயிர்களுக்கு வளர்ச்சியூக்கியாக பயன்படுகிறது. மீன் அமிலத்தை தென்னைமரம் வேரில் கட்டுவதால் தென்னங்குரும்பை உதிர்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

மேலும், மரநாய்கள் மூலம் சேதம் விளைவிக்காமல் தடுக்கப்படுகிறது. அக்னி அஸ்திரம், தண்டு துளைப்பான், இழைச்சுருட்டுப் புழு, அஸ்வினி போன்ற பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. தென்னையில் ஊடுபயிராக மிளகு, ஜாதிக்காய், பப்பாளி, வாழை போன்ற பயிர்களை பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராவூரணி வேளாண்மை அட்மா திட்ட அலுவலர்கள் பொன்.செல்வி, கு.நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story