இயற்கை விவசாயத்தை மேம்படுத்த குழுக்கள் அமைப்பு

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த குழுக்கள் அமைப்பு

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இயற்கை விவசாயத்தை மேம்படுத்த நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ஆங்காங்கே குழுக்கள் அமைத்து செயல்படுவது என நம்மாழ்வார் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இந்த இயக்கத்தின் சார்பில் நம்மாழ்வார் திருவிழா சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவை போற்றுகிற வகையிலும், அவரது கருத்துகளை விரிவான முறையில் செயல்படுத்திடும் நோக்கிலும் தஞ்சாவூரில் நம்மாழ்வாருக்கு சிலை வைக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதி அளிக்க வேண்டும். குடிநீர் காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய நிலை இருப்பது வேதனைக்குரியது. எனவே இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட விலையில்லா குடிநீர் அனைவருக்கும் வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த இயக்கத்தின் சார்பில் நீர்நிலைகளைத் தூர் வாரி பராமரிக்க முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கிற உணவு முறையில் இருந்து மாற்றி நஞ்சில்லா உணவு அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்காக இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ஆங்காங்கே நம்மாழ்வார் மக்கள் இயக்க குழுக்களை உருவாக்குவது, இதில் ஆர்வமுள்ள விவசாயிகளின் பங்கெடுப்புடன் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவது, இடர்பாடுகளைக் களைய உதவி செய்வது, இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்த பரந்த முறையில் விநியோக அமைப்பு உருவாக்கி செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் நாள் நிகழ்வுக்கு அக்னி தங்கவேலு தலைமை வகித்தார். அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி தொடக்கவுரையாற்றினார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அலுவலர் கோ.பாலச்சந்திரன் சிறப்புரையாற்றினார். சாதனை இளைஞர்களான கிரீன்நாடா மு.ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் நீ. ஹரிகிருஷ்ணன், எம்.கே.ராம்பிரபு, கேப்டன் அசோக்ராஜ், நகர்ப்புற களப்பணியாளர் எமன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். மேலும், தமிழர் மருத்துவம் என்ற தலைப்பில் மருத்துவர் கோ. சிவராமன், நீர் மேலாண்மை என்ற தலைப்பில் எஸ்.செந்தூர் பாரி, கால்நடை செல்வம் என்ற தலைப்பில் பேராசிரியர் ந. புண்ணியமூர்த்தி ஆகியோர் பேசினர். ஏறத்தாழ 50 இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இயக்க ஒருங்கிணைப்பாளர் சி. மகேந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் சுப. உதயகுமார், கே. ச சௌந்தரராஜன், பேராசிரியர் க.பழனித்துரை, வழக்குரைஞர் சி. சந்திரகுமார், வெ.ஜெயபாரதி, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், ஏ.மாவடியான், க.தவச்செல்வம், ஆர்.ராகவேந்திரன், கோ.மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story