பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
பள்ளிக்கல்வி இயக்குனர்
பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐம்பெரும்விழாவாக 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டுதல், 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களை பாராட்டுதல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி (Tablet) வழங்குதல், 67 வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூன் 14 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள,
ஐம்பெரும் விழாவிற்கு பட்டியலில் பெயர் உள்ளவர்கள் ஜூன் 14 ஆம் தேதி அன்று காலை 8.30 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தவறாமல் வருகை புரியும்படி தெரிவித்திடவும், அவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்திடவும், நடவடிக்கையினையும் எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இந்த ஐம்பெரும் விழாவில் தொடக்கக் கல்வி சார்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே தொடக்கக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகளின்படி ஆசிரியர்கள் கையடக்கக் கணினி பெறுவதற்கு வருகைப்புரிதலை உறுதி செய்திடவும் தெரிவிக்கப்படுகிறது.