அதீத பணி நெருக்கடி: வருவாய்த்துறையினா் போராட்டம்

அதீத பணி நெருக்கடி: வருவாய்த்துறையினா் போராட்டம்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களால் அதீத பணி நெருக்கடிக்குள்ளாவதாக பணிகளையும் புறக்கணித்து வருவாய்த் துறையினா் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. பிரேம்குமாா் முன்னிலை வகித்தாா்.

துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளா், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அலுவலா்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு அலுவலா்கள் மற்றும் வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா். ஏற்கெனவே, கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.13) ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.

இப்போது, காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனா். மூன்றாவது கட்டமாக வரும், 27ஆம் தேதி தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

Tags

Next Story