முதுகுளத்தூர் அருகே எருது கட்டு விழா
எருது கட்டு விழா
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் திருவிழா மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எருதுகட்டு விழா நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற விழாவில் பால்குடம் மற்றும் அதனை தொடர்ந்து, எருது கட்டு விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போல் காளையை அடக்காமல் நீண்ட வைக்கோல் கயிற்றால் வடம் கட்டி அடக்குவதே எருது கட்டும் நிகழ்ச்சி ஆகும்.
அய்யனார் கோயிலில் இருந்து வடம் எடுத்து வரப்பட்டு முனியப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த வடம் கட்டப்பட்டு எருது கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளைப் பிடித்தனர். எருதுகட்டு விழாவை காண பெண்கள், முதியோர் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.