பிப்.25 ல் பிஏசிஎல் முதலீடு மீட்பு மாநாடு
தமிழ்நாடு விவசாய முன்னேறக்கழகம் மற்றும் PACL களப்பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்- மோகனூர் சாலை முல்லை நகரில் நடைபெற்றது. விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் PACL நிதி நிறுவனத்தில் 5 கோடியே 85 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். இவர்கள் அந்த நிறுவனத்தில் ரூ. 49 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த கம்பெனி செயல்படுவதற்கு செபி தடை விதித்ததால், முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பி வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி லோதா கமிட்டி கடந்த 8 ஆண்டுகளாக முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது.
எனவே மத்திய அரசு PACL நிறுவனத்தின் ஏழை முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்களை காக்கும் வகையில், இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமித்து, விரைவில் விசாரணையை முடித்து, முதலீட்டுப் பணத்தை திருப்பி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்று லோக்சபா தேர்தல் அறிக்கையில் வெளியிடும் அரசியல் கட்சிக்கே, தமிழகத்தில் உள்ள சுமார் 1 கோடி PACL முதலீட்டாளர்கள் குடும்பத்தினர் வாக்களிப்பார்கள். தவறினால் வருகிற லோக்சபா தேர்தலை புறக்கணிக்கவும் உள்ளோம்.
தமிழகத்தில் விவசாயிகளை காக்கும் வகையில், அரசு மதுபான கடைகளை மூடிவிட்டு தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,000, கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ. 150 வீதம் விலை அறிவிக்க வேண்டும். ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 58 வயது பூர்த்தியடைந்த விவசாயிகளுக்கு, ஓய்வூதியமாக மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள வளையப்பட்டி அருகில் வருகிற பிப்ரவரி 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மாநிலம் தழுவிய முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் சுமார் 1 லட்சம் விவசாயிகள், PACL முதலீட்டாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.