ராசிபுரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பாதபூஜை விழா

ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பாதபூஜை விழா நடந்தது.

இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்வு நடைபெற இருப்பதால் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் பொதுத் தேர்வில் நன்றாக தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடிக்க தனியார் பள்ளிகளில் கல்விக்காக பல்வேறு சிறப்பு பூஜையில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டி பகுதியில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. 10ம், 12ம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு நடைபெறுவதையொட்டி, பள்ளியின் சார்பில் தெய்வத் தமிழ் முறைப்படி பாதபூசை வழிபாடு, ஹயக்ரீவர் பூஜையும், அம்மையப்பர் வழிபாடு, சிறப்பு கல்வி யாக ஹாம பூஜை பூஜை நடைபெற்றது. பள்ளியின் இயக்குனர் மணிவண்ணன் பூஜையை தொடங்கி வைத்தார்.

இதில், மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, பெற்றோர்களின் பாதங்களில் தண்ணீர் விட்டு பால் ஊற்றி , பூக்கள் தூவி பாதங்களில் விழுந்து மாணவ மாணவிகள் ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சியானது, அதிகார நந்தி திருமடத்தின் மூலம் நடத்தப்பட்டது. இதில், பள்ளியின் கல்வி நிர்வாக இயக்குனர் சுப்ரமணியம், முதல்வர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த வழிபாடு குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் பெற்றோர்களை வணங்கி விட்டு செய்வது சாலச்சிறந்தது. நம் மரபின் படி நம்மைவிட வயதில் மூத்தவர்களிடம் ஆசிபெறுதல் சிறந்த பண்பு . திருவள்ளுவர் திருக்குறளில் பெரியாரைத்துணைக்கோடல் என்ற அதிகாரத்தின் மூலமாக அதன் மான்பினை தெரிவித்துள்ளார்.

அதை நினைவுபடுத்தும் விதமாக நம் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10ம், 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பாத பூஜையை செய்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசிர்வாதம் பெறுவதற்காக இப் பள்ளி வளாகத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

Tags

Next Story