பத்மஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாச்சியார்

பத்மஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாச்சியார்

அரவிந்த் கண்மருத்துவமனை இயக்குனர்

பத்மஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நாச்சியார் செய்தியாளர்களை சந்தித்தார்.

கடந்த மே 9 ஆம் தேதி மத்திய அரசின் சார்பாக அரவிந்த் கண் மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் நாச்சியாருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டாக்டர்.G.நாச்சியாரின் உடன் பிறந்த சகோதரர் டாக்டர் G.வெங்கிடசாமியால் அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976-இல் ஆரம்பிக்கப்பட்டது. இவருக்கு கடந்த 1993ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. டாக்டர். G.நாச்சியாரின் கணவர் டாக்டர் P.நம்பெருமாள்சாமி ஆரம்ப கால நிறுவன உறுப்பினராகவும் மருத்துவமனை வளர்ச்சிக்கு சிறப்புற பணியாற்றி கொண்டுள்ளார்.

இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று டாக்டர் நாச்சியார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக இந்த விருதை நான் பெற்றுள்ளேன். எங்கள் நிறுவனத்திற்கு இது மூன்றாவது தேசிய விருதாகும். அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கிடைத்த கௌரவமாக இந்த விருதை நான் பார்க்கிறேன். எனது தமையனார் டாக்டர் வெங்கடசாமியின் முயற்சியில் அரவிந்த் கண் மருத்துவமனைகள் உருவாகின. கடந்த 1976 ஆம் ஆண்டு மதுரையில் 11 படுக்கையோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, 135 இடங்களில் இன்று விரிந்து பரவியுள்ளது. இன்றைக்கு 6000 பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறோம். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வடமலாபுரம் என்ற சிறிய கிராமம் தான் எனது சொந்த ஊர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த எங்களுக்கு தாயார் லட்சுமிதான் எல்லா வகையிலும் ஊக்குவிப்பாக அமைந்தார்.

எங்கள் மருத்துவமனையில் நிர்வாக முறை மிகத் திறன் வாய்ந்ததாக இருக்கின்ற காரணத்தால் தான் நாங்கள் இந்த அளவுக்கு வளர முடிந்தது. 45 விழுக்காடு இலவச சேவைகளை செய்து வருகிறோம். இதுவரை நன்கொடை என்று யாரிடமும் பணம் பெற்றதில்லை எங்களது சொந்த வருமானத்திலேயே சேவையையும் செய்து வருகிறோம். எல்லா மருத்துவமனைகளையும் சேர்த்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 15,000 பேருக்கு மருத்துவம் செய்கிறோம். மதுரையில் மட்டும் 2000 பேருக்கு கண் சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். எங்களிடம் மருத்துவ சேவை பெற்ற நோயாளிகளே எங்களுக்கான விளம்பர தூதுவர்களாக அமைகிறார்கள். எங்களது பணியாளர்கள் ஒவ்வொருவரும் எட்டு மணி நேரத்தில் மிகத் திறமையாக ஆக்கபூர்வமாக பணி செய்கின்றனர். உங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் இங்கு அனைவருமே தன்னார்வலர்கள் தான் அவர்களுக்கு ஊதியம் கிடையாது.

பொதுமக்களுக்கு கண்பார்வை வழங்க வேண்டும் அதனை தரமாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். அரவிந்த் கண் மருத்துவமனைக்கு என்று ஒரு மதிப்பு பொதுத்தளத்தில் உள்ளது அதுதான் எங்களது சொத்து. எங்கள் நிறுவனத்தில் உள்ள ஆய்வு மையம் நிறைய கண்டுபிடிப்புகளை செய்துள்ளது. எடுத்துக்காட்டாக கரோனா பெருந் தொற்றுக் காலத்தில் அதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கண்பார்வை குறைபாடு எப்படி எல்லாம் ஏற்பட்டுள்ளது என்பதை எங்களது ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. உங்கள் நிறுவனத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக இதனை ஆய்வு செய்து உள்ளோம்.

அச்சமயத்தில் நிறைய பெரும் தொற்று நோயாளிகளுக்கு கண்பார்வை குறைபாடு மூளையில் ரத்தக் கசிவு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. இளைய தலைமுறையினர் நிறைய பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று உலக அளவில் மருத்துவம் சார்ந்து வழங்கப்படக்கூடிய ஆராய்ச்சி கட்டுரைகளில் அரவிந்த் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. ஐ டி மூலமாக தற்போது செயற்கை நுண்ணறிவில் நாங்கள் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எடுத்துக்காட்டாக சர்க்கரை நோயாளிகள் ஆயிரம் பேரின் புகைப்படங்களை எடுத்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகள் கண்ணிலும் இதயத்திலும் ஏற்படும் என்பதை பகுப்பாய்வு செய்திருக்கிறோம்.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு குடும்பத்தில் யாரேனும் கிளாக்கோமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு அது வருமா என்பது குறித்து வருமா வராதா என்பதை மிக எளிதாக கண்டுபிடித்து விட முடியும் என்றார். டாக்டர். G.நாச்சியார் இந்த விருதை மருத்துவமனை பணியாளர்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் வந்ததாகவும், அவர்களின் பிரதிநிதியாக நான் பெற்று கொண்டு மருத்துவமனை பணியாளர்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

இந்த சேவை கால காலமாக தொடர வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு மேலும் பல ஊர் மக்கள் பயன் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Tags

Next Story