கன்னியாகுமரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை ஊஞ்சல் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது.இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க, கோவில் உள்பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர்.
இந்த ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருள செய்து, மேளதாளங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தை சுற்றி மூன்று முறை வலம் வரச் செய்து, பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.