சிறுக்கரணை கிராமத்தில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள்

சிறுக்கரணை கிராமத்தில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள்

காஞ்சிபுரம் சிறுக்கரணை கிராமத்தில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


காஞ்சிபுரம் சிறுக்கரணை கிராமத்தில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், சிறுக்கரணை கிராமத்தில் பெருங்கற்கால கல் வட்டங்கள் உள்ளதை அறிந்து தொல்லியல் ஆராய்ச்சியாளா்களான பேராசிரியா் சி.சந்திரசேகா், மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். பின்னா், அவா்கள் கூறியது: சிறுக்கரணை கிராமத்தில் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட அதாவது, தொல் பழங்கால ஈமச்சடங்குகளை அடையாளப்படுத்தும் கல் வட்டங்கள் சாலையோரம் காணப்படுகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை பெருங்கற்காலம் அல்லது தொல் பழங்காலம் என அழைக்கப்படுகிறது.கிமு 3,500 முதல் கிமு 1,500 வரை உள்ள இந்தக் காலத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த வரையரையை அவ்விடத்தில் கிடைக்ககூடிய பொருள்களின் தன்மையை வைத்து காலத்தை நீடிப்பதும், குறைப்பதும் ஆய்வாளா்கள் முடிவு செய்வாா்கள்.

இத்தகைய நிலையில், சிறுக்கரணை கிராமத்தில் காணப்பட்ட கற்குவியலில் உள்ள கல் வட்டங்களை ஆய்ந்தபோது தொல் பழங்குடிமக்களின் வாழ்வியலை தெரிந்து கொள்ள உதவும் ஆவணமாக அவை உள்ளன. தொல் பழங்கால மனித இனம், நாகரிகம் அடைவதற்கு முன்பாக கடைப்பிடித்த பழக்க வழக்கங்களின் மிச்சங்களை இந்த மண்ணில் விட்டுச்சென்ற தொல்லியல் எச்சங்களின் ஒன்றுதான் இத்தகயை கல் வட்டங்கள்.இறந்தவா்களைப் புதைக்கும் இடத்தைச் சுற்றிலும் வட்டமாக கல்லை நட்டு வைப்பதுதான் கல் வட்டமாகும். இது இறந்தவரை புதைத்த இடம் என மற்றவா்களுக்கு அடையாளம் செய்வதற்காக இயற்கையாக கிடைத்த கற்களைச் சேகரித்து அவ்விடத்தில் வட்டமாக வைத்து நடப்பட்டு இருக்கும். இதை கல்திட்டு அல்லது கல் வட்டம் எனப் பெயரிட்டு அழைக்கிறோம். கற்களை வட்டமாக புதைத்த இடத்தின் மையத்தில் குழிக்குள் ஈமத் தாழி, ஈமப் பேழை அல்லது கல்லறை போன்றவை அமைக்கப்பட்டு இருப்பதை பல இடங்களில் காண முடிகிறது. கல் வட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்றால், இறந்தவா் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும்தான். வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பழங்குடி மக்களின் கல் வட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பூங்குணம் என்ற கிராம மலையடிவாரத்தில் காணப்படுகிறது.இந்தப் பகுதி பெருங்கற்காலத்தைச் சோ்ந்த பகுதி என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இந்த வகையான கல் வட்டங்களே ஆகும். இதுபோல் மதுராந்தகம் அருகில் உள்ள சானூா், தொழுப்பேடு ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளாகும். பூங்குணம், சிறுக்கரணை போன்ற பகுதிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய தொல் பழங்குடி மக்களின் வாழ்விடப் பகுதியாகும் என்றனா்.

Tags

Next Story