பல்லடம் : கொலை வழக்கில் வடமாநிலத் தொழிலாளிக்கு ஆயுள்

பல்லடம் : கொலை வழக்கில் வடமாநிலத் தொழிலாளிக்கு ஆயுள்

ஹேம் சாகர் நாயக்

பணப்பிரச்சினையில் நண்பனின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம் பலாங்கீர் பகுதியை சேர்ந்தவர் கமல்தார் சாகர்(25). இவருடைய நண்பரும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருமான ஹேம் சாகர் நாயக்(32) என்பவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பல்லடம் குங்குமம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். பக்கத்தில் உள்ள கோனக்காடு தோட்டத்தில் ஒரே அறையில் இருவரும் தங்கியிருந்து வேலை செய்தனர். இருவருக்கும் மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கமல்தார் சாகர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை காணவில்லை. அதை ஹேம் சாகர் நாயக் எடுத்துள்ளதாக அவரிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 7-4-2020 அன்று இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு நள்ளிரவு 12 மணி அளவில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த கமல்தார் சாகர் தலையில் கல்லை தூக்கிப்போட்டு ஹேம் சாகர் நாயக் கொலை செய்தார். பின்னர் உடலை கம்பளியால் மூடி அங்கிருந்து எடுத்துச்சென்று தோட்டத்தின் ஓரத்தில் உள்ள ஒரு குழிக்குள் போட்டு மண்ணை போட்டு மூடினார்.

பின்னர் துர்நாற்றம் வீசியதை எடுத்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஹேம் சாகர் நாயக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக்காக ஹேம்சாகர் நாயக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story