நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும்

நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும்

நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.


நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அரசு மற்றும் கூட்டுறவு நடத்தும் நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படாதது, தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெற்ற கடனை கட்டாய வசூல் செய்வதை நிறுத்த வலியுறுத்தியும், தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மற்றும் அம்மா மருந்தகத்தை சிறப்பாக நடத்திட வலியுறுத்தியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மனுவில் கூறியுள்ளதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டை தாரர்கள் அரிசி, சீனி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட குடிமை பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூபாய் 160 முதல் 185 வரையிலும், ஒரு லிட்டர் ஆயில் ரூபாய் 140 முதல் 150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அன்றாட உணவில் பயன்படுத்தி வரும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை நியாயவிலை கடைகளில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் துவரம் பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 30 என்ற அளவிலும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 25 என்ற அளவிலும் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலும், மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்திலும் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கி வந்தார்கள். இதன் மூலம் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை குறைந்த விலையில் பெற்று பயனடைந்து வந்தார்கள். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள இந்நேரத்தில் மே மாதம் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இதுவரை வழங்கப்படவில்லை. இது பற்றி நியாயவிலை கடை பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களிடம் விசாரித்த போது, குடோன் மற்றும் நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாவட்ட வழங்கல் அதிகாரியால் இதுவரை மே மாதத்திற்கான துவரம்பருப்பு பற்றும் பாமாயில் ஒதுக்கீடு கூட செய்யப்படவில்லை என தெரியவருகிறது. பொதுமக்கள் அன்றாட உணவில் பயன்படுத்தி வரும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை அரசு முறையாக கொள்முதல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்காமல் இருந்து வருவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, நியாயவிலை கடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துவரம்பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை உடனடியாக ஒதுக்கீடு செய்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிட போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டுமாய் தமிழ்நாடு அரசையும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணை நியாயவிலைக் கடைகளில் நகர்புறத்தில் நிறுத்தம் செய்யப்பட்டும், கிராமப்புற நியாயவிலை கடைகளில் பெயரளவிலும் வழங்கப்பட்டும் வருகிறது. தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் இருந்து முறையாக மண்ணெண்ணை ஒதுக்கீடு பெற்று ஏழை, எளிய மக்களுக்கு வழங்காமல் தொடர்ந்து அரசியல் செய்து வருவதனால் ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் அடுப்பு எரிக்கவும், விளக்கு எரிக்கவும் பயன்படுத்தும் மண்ணெண்ணையை மாதம் தோறும் முறையாக பெற்று குடும்ப அட்டை தாரர்களுக்கு தடையில்லாமல் வழங்கிட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். விவசாய கடன் தொகை கட்டாய வசூல் தூத்துக்குடி மாவட்டம், வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியது மட்டுமல்லாது, அதிக அளவிலான பொருட்சேதம், பயிர் சேதம் ஏற்பட்டு பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டதை இந்த நாடே அறியும். அதிலும் குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தாமிரபரணி ஆற்று கரையோரம் உள்ள கிராமங்களும், விவசாய நிலங்களும் முற்றிலுமாக பேரழிவை சந்தித்தது. இதில், தாமிரபரணி ஆற்று கரையோரம் உள்ள ஸ்ரீவைகுண்டம் (வெள்ளூர் புதுக்குடி), சிவகளை, பேரூர், பெருங்குளம், ஏரல், சாயர்புரம், சிவத்தையாபுரம், ஆறுமுகமங்கலம், பழையகாயல், முக்காணி, ஆத்தூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி (ஆதிநாதபுரம்) ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய கடன் பெற்ற விவசாயிகளிடமிருந்து விவசாய கடனை கட்டாய வசூல் மூலம் அடாவடியாக வசூல் செய்வது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் 24.01.2024 தேதிய கடிதத்தின்படி, மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றி அமைத்து கால நீட்டிப்பு செய்திட உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன்படி, விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன்களை வசூல் செய்யாமல், கடன் திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டித்து செயல்படுத்திட அறிவுறுத்திய நிலையில், அதனை செயல்படுத்தாமல் விவசாயிகள் ஏற்கனவே பேரழிவை எதிர்கொண்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள இக்காலகட்டத்தில் கூட்டுறவு விவசாய கடன்களை கட்டாய வசூல் செய்துவருவதை தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மேலும், தாமிரபரணி ஆற்றுக்கரையோரம் உள்ள மேற்படி கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு விவசாய சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன்களை முற்றிலும் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி பண்ணை பசுமை அங்காடி தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மற்றும் அம்மா மருந்தகம் ஆகியவை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் துவங்கப்பட்டு, தமிழகத்தில் முதலிடம் பெற்ற நிறுவனமாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இந்த பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மூலம் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, வெயிலின் தாக்கத்தை கட்டுபடுத்த பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் எலுமிச்சை பழம் கூட விற்பனைக்கு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், அம்மா மருந்தகங்கள் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் உயிர்காக்கும் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இந்த அம்மா மருந்தகத்தில் அனைத்து மருந்துகளும் கிடைப்பதில்லை. முறையான நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மாண்புமிகு அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை முடக்கிட தற்போது முயற்சி நடப்பதாக தெரிய வருகிறது. எனவே, தமிழகத்தில் முதலிடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகளையும், உயிர்காக்கும் மருந்துகளையும் வழங்கி வந்த இந்த கூட்டுறவு சங்கம் நிர்வாக சீர்கேட்டால் அழிந்து வருவதை தடுத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்திட தமிழக அரசையும், ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்ததை போன்று, தற்போதும் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story