போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்
வாணாபுரத்தில் சாலை பணிக்காக விலை நிலத்திலிருந்து மண் எடுப்பதாகக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாணாபுரத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக விளை நிலத்தில் அதிக மண் எடுப்பதாக கூறி, ஊராட்சி தலைவர் தலைமையில் போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது. வாணாபுரத்தில் இருந்து ஓடியந்தல் கிராமம் வரை 1.2 கி.மீ., தொலைவிற்கு தார் சாலை அமைக்க, நபார்டு நிதியில் இருந்து ரூ.93 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக அருகாமையில் உள்ள விளைநிலத்தில் இருந்து அதிகளவு மண் தோண்டி எடுத்து, சாலையோரம் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது. வாணாபுரம் ஊராட்சி தலைவர் தீபாவின் கணவர் அய்யனார், விளைநிலத்தில் மண் எடுப்பது குறித்து கேட்டபோது, ஒப்பந்ததாரர் தரப்புக்கும், ஊராட்சி தலைவரின் கணவர் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், 10க்கும் மேற்பட்டோர் மீது பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இதையடுத்து, மீண்டும் விளைநிலத்தில் அதிக மண் எடுப்பதாக கூறி, ஊராட்சி தலைவர் தீபா தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் பணிகளை நிறுத்துமாறு கூறி, நேற்று மாலை 4:30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பகண்டைகூட்ரோடு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.