செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
பங்குனி திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பழைமையும் பெருமையும் வாய்ந்த செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வது போலவே, இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனித் திருவிழாவும் ஒன்று.
11நாள் நடைபெறும் இந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.
பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி, அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.