தென்திருப்பேரை கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

தென்திருப்பேரை கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
பங்குனி திருவிழா கொடியேற்றம்
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம் வருகிற 29-ந் தேதி நடைப்பெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 7-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமைந்துள்ள தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தென்திருப்பேரை வீதிகளில் கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடிமரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டத்திற்கு மாலை மரியாதை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து காலை 7.30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி நிகரில் முகில்வண்ணன் அம்பாள்களுடன் வீதி உலா நடைபெறும். வருகின்ற 29-ந்தேதி கருட சேவை நடைபெறும். ஏப்.2-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.3-ந் தேதி தீர்த்த வாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம பொது மக்களும் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story