பங்குனி கிருத்திகை : நாமக்கல் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள பங்குனி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பங்குனி மாத வளர்பிறை கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. நாமக்கல் - மோகனூா் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு காலை 6.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் 10 மணிக்கு மூலவா் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு ராஜ அலங்காரம் நடைபெற்றது.

மேலும், நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இவை தவிர, மோகனூா் காந்தமலை, நாமக்கல் கருமலை, கூலிப்பட்டி, சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், திருநீா் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ரம்ஜான் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags

Next Story